வெள்ளியங்கிரி மலையில் சிவபெருமான் தரிசனத்திற்காக ஏறிய இளைஞர் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள சிவலிங்கத்தை தரிசிக்க மாதம்தோறும் சிவராத்திரி, பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். சமீப காலமாக பல யூட்யூப் இன்ப்ளூயன்சர்கள் வெள்ளியங்கிரிக்கு ட்ரெக்கிங் சென்று வீடியோக்களை பதிவிட்டு வருவதால் வெள்ளியங்கிரி மலையேற பலரும் முண்டியடித்து வருகின்றனர்.
7 மலைகள் ஏறி செல்ல வேண்டிய கோவில் என்பதால் சுவாச பிரச்சனை, இதய பிரச்சினை உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த மாதம் மகாசிவராத்திரியில் ஏராளமானோர் மலையேற முயன்ற நிலையில் 5 பேர் பலியான சம்பவம் நடந்தது. அதுபோல தற்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் என்பவர் கடந்த 18ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையேற சென்றுள்ளார். 6வது மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது தவறி பள்ளத்தாக்கில் அவர் விழுந்துள்ளார். அப்பகுதி பழங்குடி மக்களின் உதவியோடு படுகாயமடைந்த வீரக்குமாரை மீட்ட வனத்துறையினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது சித்திரா பௌர்ணமிக்காக பலரும் மலையேறி வரும் நிலையில் பாதுகாப்பான முறையில் மலையேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.