Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்று வாருங்கள் கிருஷ்ணச்சாமி அவர்களே!

சென்று வாருங்கள் கிருஷ்ணச்சாமி அவர்களே!
, செவ்வாய், 8 மே 2018 (12:18 IST)
நீட் என்னும் அரச பயங்கரவாதத்திடம்  தங்களைப் பலிக்கொடுத்து இருக்கிறோம்.


எத்தனைப் போராட்டங்கள் இந்த மண்ணில்! அனைத்தையும்  நீட் என்னும் ராட்சத பூதம் விழுங்கி விட்டதே! உங்கள் மரணம் ஏதோ CBSE நிர்வாக குளறுப்படியால் நிகழ்ந்தது இல்லை. சிலரது அழுகிப்போன மூளையால் சில நீரோக்களின் கொடூர சிந்தனையால் நிகழ்ந்தது. உங்களின் மரணம் ஒட்டு மொத்த ஒரு சமூகத்தின் வலிகள், இழப்புகள், துன்பங்கள் தந்தையே! போய்  வாருங்கள் எங்களின் தகப்பனே!
 
நீங்கள் யார் பெற்ற மகன் என்று தெரியவில்லை. ஆனால்  நீங்கள் மகாலிங்கத்திற்கு மட்டும் தந்தை அல்ல! நீட் எதிரான களத்தில் நம் அனிதா எப்படி நம் அனைவரின் தங்கை ஆனாரோ! அதுப்போல கிருஷ்ணச்சாமி ஆகிய நீங்கள் எளியோர்கள் அனைவரின் தந்தை ஆகி எங்களின் குலச்சாமி ஆகி விட்டீர்கள்! போய்  வாருங்கள் எங்களின் தகப்பனே!
 
நீங்கள் நூலகர் என்பதை அறிந்தோம்! உலகை உலுக்கியப் புரட்சிகள் பற்றிய நூல்களை எல்லாம் நீங்கள் நிச்சியம் படித்திருப்பீர்கள். ஆனால் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு மௌனப் புரட்சியின் சாட்சி ஆகி விட்டீர்களே! போய்  வாருங்கள் எங்களின் தகப்பனே!
webdunia
 
நீங்கள் பல விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தியதாக அறிகிறோம். உங்கள் இழப்பு அவர்களுக்கான இழப்பு மட்டும் அல்ல. என் மகன் மருத்துவர் ஆவான்! என் மகள் மருத்துவர் ஆவாள்! என்று கனவுகள் சுமந்து, இன்னும் ஒரு மொழி தெரியாத மாநிலத்தில், தங்களின் செல்வங்களை அழைத்துக் கொண்டு நீட் மையங்கள் நோக்கி ஓடினார்களே, அந்த அனைவரின் இழப்பு! போய்  வாருங்கள் எங்களின் தகப்பனே!
 
நேற்று அம்மையிடம் முதல்வர் தொலைப்பேசியில்  துக்கம் விசாரித்தாராம். அடிமைகள் உடம்பில் ரத்தம் நிச்சயம் இருக்காது. ஆனால் கொஞ்சம் இரக்கம் இருக்கிறது. சில லட்சங்கள் நிவாரணங்கள், இந்த  நிவாரணங்கள் தருபவர்கள் எல்லாம் நவீன எம தூதர்கள்.  உங்களுக்கு கல்லறையை த் திறந்து வைத்த இந்த அரசு, இன்னும் ஒரு பக்கம் நினைவு மண்டபத்தைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. போய்  வாருங்கள் எங்களின் தகப்பனே!
 
உங்களின் உடல் உடற்க்கூறு செய்யப்பட வில்லையாம். ஆனால் உங்களின் மனக்கூறு தன்னை நாங்கள் அறிவோம் தந்தையே! அதில் தான் எத்தனை துன்பங்கள் துயரங்கள்! போய்  வாருங்கள் எங்களின் தகப்பனே!
 
உங்கள் மரணம் எங்களுக்கு சொன்னது ஒன்று தான் தந்தையே! மரணம் மாவீரனுக்கு தரப்படும் மகத்தான பரிசு. மாவீரர்கள் மரணிப்பதும் இல்லை, புதைக்கப்படுவதும் இல்லை. மரணம் உங்களையும் எங்கள் தங்கை அனிதாவையும் முத்தமிட்ட அந்த நொடிகள், அந்த வினாடிகள், உங்களின் முன்பு மண்டியிட்டு சொன்னது நீங்கள் மாவீரர்கள்! நீங்கள் போராளிகள்! என்று கண்ணீருடன் விடை தருகிறோம்! போய்  வாருங்கள் எங்களின் தகப்பனே!

 
webdunia
இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப்?