நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் ஏன் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டார்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. க்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர்களுக்கு கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழக மாணவர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் செல்லும் மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நுழைவு சீட்டைக் காட்டி ரூ.1000ஐ பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டம் இலவசமாக அறிவிக்கப்பட்டது.
தமிழக மாணவ-மாணவியர் அண்டை மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத சென்ற மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் சென்ற தந்தை கிருஷ்ணசாமி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் மனித உரிமை மீறலாக கருதப்படுகிறது.
தமிழக அரசும் சி.பி.எஸ்.இ யும் தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு மையங்களை அமைக்க தவறியுள்ளன. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. க்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.