ஏழாம் வகுப்பு மாணவரின் பெயருக்கு பின் ஜாதி பெயரை எழுதிய திருப்பத்தூர் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் நிலையில், இங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியர் விஜயகுமார் இசைக்கருவிகள் குறித்த பாடங்களை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு இசைக் கருவியின் பெயரை குறிப்பிட்டு, அந்த இசை கருவியை குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில் மாணவரின் ஜாதி பெயரை குறிப்பிட்டு, அனைத்து மாணவர் முன்னிலையிலும் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் கூறி அழுத நிலையில், பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் அங்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, மாணவனின் பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் திடீரென பள்ளியை முற்றுகையிட்ட பின்னர் இந்த விவகாரத்தில் தலையிட்ட மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும், மாவட்ட கல்வி அலுவலர், தாசில்தார், காவல்துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்ததை அழுது, மாணவனின் பெற்றோர் மற்றும் அவருடைய உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.