தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் இறங்க உள்ளனர்.
திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம் மற்றும் அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் கால முறை ஊதியம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனையடுத்து வரும் ஜனவரி 25-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டம் குறித்து ஒவ்வொரு மாவட்டம் வாரியாக விளக்க கூட்டம் நடத்துவது மற்றும் மற்ற சங்கங்களிடம் ஆதரவு கேட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.