அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில், டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாக கூறப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாகவும், இதற்கான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டதால், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தவறானவை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.
இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், டாஸ்மாக் ஆவணங்களை பறிமுதல் செய்தது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.