தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலைக் காரணிகளைக் கொண்டு வானிலையை வானிலை ஆய்வு மையம் கண்காணித்து அளிப்பது போல சில தனிநபர்களும் வானிலை அறிக்கைகளை மக்களுக்கு அறிவித்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் முக்கியமானவர்.
தமிழகம் முழுவதும் கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. நகர்ப் பகுதிகளில் இப்போதே வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக விளக்கப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்,
நிலத்திலிருந்து கடல் நோக்கி வீசும் காற்று காரணமாகவும் அதிகரிக்கும் நிலக் காற்று காரணமாகவும் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை எட்ட வாய்ப்பிருக்கிறது.
முதல் அம்புக்குறி நிலத்திலிருந்து கடல் நோக்கி வீசும் காற்றின் வலிமையைக் காட்டுகிறது. இது வெகு நிச்சயமாக ஈஸ்டர்லீஸ் எனப்படும் கிழக்கு நோக்கி வீசும் காற்றை உருவாக்கும். மேலும், கடற்காற்று நிலத்தை நோக்கி வீசவிடாமல் தடுக்கும். இதனால் வெப்பம் குறையாது. இரண்டாவது அம்புக்குறி நிலக்காற்றின் போக்கை உணர்த்துகிறது. இது நிலத்தில் வெஸ்டர்லீஸ் எனப்படும் மேற்கு நோக்கி வீசும் காற்றை உருவாக்குகிறது. இதனால், வெப்பக் காற்று ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லும்.
மூன்றாவதாக உள்ள பெட்டி, வடமேற்கு காற்று நிலப்பரப்பில் அதிக தூரம் பயணிக்கும். இது மகாராஷ்டிரா கர்நாடகா வழியாக ராயலசீமாவை அடையும்போது மொத்த வெப்பக் காற்றையும் கடத்திவரும்.இந்த வெப்ப அலையால் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. முதலில் வெப்ப அலை என்றால் என்னவென்பதை நாம் அறிந்து கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸை எட்டும் வரையில் வெப்ப அலையைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.
வெப்ப அலை என்பது பொதுவாக ஒரு பகுதியின் சராசரி வெப்ப அளவிலிருந்து 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிப்பது. உதாரணத்துக்கு ஓரிடத்தின் வெப்ப அளவு 32 டிகிரி செல்சியல் என வைத்துக்கொள்வோம். அதிலிருந்து 5 டிகிரி ஏறினால் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். இதை அந்தப்பகுதியின் வெப்ப அலை என்போம். இப்படியான 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிப்பால் அச்சப்படத் தேவையில்லை. சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் என்றே இருக்கும்.
இந்த முன்னறிவிப்பையும் புவி வெப்பமயமாதலையும் தயவு செய்து தொடர்புபடுத்த வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.