மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என்ற நிலை இந்த ஆண்டில் இருந்து தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காத காரணத்தால் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பெரும் பாதிப்பை அடைந்தனர். அனிதா போன்றவர்கள் தங்கள் இன்னுயிரையும் இழந்தனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நீட்' உள்பட முக்கிய நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு முன்பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. இந்த முன்பதிவை வரும் 26ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியபோது, 'மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர், என்று கூறினார்.
முன்பதிவு செய்யும் முறை குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அவர்கள் கூறியபோது, 'http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.