சிபிஎஸ்இ வினாத்தாள் ஒன்றில் சாதிரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தும்படி கேள்விகள் இருப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், அது சிபிஎஸ்இ வினாத்தாளே இல்லை என மறுத்துள்ளது தமிழக பாஜக.
சிபிஎஸ்இ பாடத்தில் தலித் மற்றும் இசுலாமியர்களை இழிவுப்படுத்துமாறும், பாகுபாட்டை வளர்க்கும் விதமாகவும் வினாத்தாள்களில் கேள்விகள் கேட்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோல மேலும் பலர் அந்த வினாத்தாளை சுட்டிக்காட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
இதுகுறித்து செய்தி அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், “நேற்று முதல் ஒரு வினாத்தாளின் புகைப்படத்தை பகிர்ந்து அது கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள 6ம் வகுப்புக்கான வினாத்தாள் என்றும், அதில் சாதிய, மத பாகுப்பாட்டை வளர்க்கும் வினாக்கள் உள்ளதாகவும் பேசி வருகின்றனர்.
ஆனால் அது கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் அல்ல. வேறு ஏதாவது தனியார் பள்ளிகளுடையதாய் இருக்கலாம் அல்லது மத்திய அரசுக்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கும் இழுக்கை ஏற்படுத்த யாராவது இதை செய்திருக்கலாம். இதை வைத்துக்கொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் மத்திய அரசை சில அரசியல் கட்சிகள் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும். இதன்மூலம் தமிழக மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவதோடு, சாதிய, மத கலவரங்களையும் ஏற்படுத்த முயல்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
அந்த வினாத்தாள் குறித்த புகைப்படத்திலும் வினாக்களை தவிர எந்த பள்ளி தயாரித்தது என்பது குறித்த ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆதலால் எதை வைத்து இது இந்த பள்ளியினுடையதுதான் என முடிவு செய்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.