தமிழக சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – அமமுக கூட்டணி அமையுமா என்பது குறித்த பல்வேறு கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட கட்சி உட்பூசல்களால் கட்சி இரண்டாக பிரிந்து அமமுக உருவானது. தற்போது அதிமுக ஆட்சி செய்து வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா விடுதலையாகி வந்தால் இரு கட்சிகளும் இணையும் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்பட்டது. சசிகலா அதிமுகவில் ஏற்றுக் கொள்ளப்படுவாரா என்பதற்கு அமைச்சர்கள் பலத்தரப்பட்ட கருத்துகளை கூறி வந்த நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் குறித்தோ, தேர்தல் கூட்டணி குறித்தோ பொது வெளியில் பேசுவதை சமீப காலமாக அமைச்சர்கள் தவிர்த்து வருகின்றனர்.
அதேசமயம் அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு சென்றவர்கள் திரும்ப வந்தால் ஏற்றுக் கொள்ள அதிமுக தயாராய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னரே அதிமுக சார்பில் தாய் கழகத்திற்கு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக – அமமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. அதேசமயம் எதிர்காலத்தில் என்ன மாற்றம் நிகழும் என்பதையும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.