கோயம்புத்தூர் அருகே காதல் தம்பதிகளை பஞ்சாயத்து செய்து போலீஸ் பிரித்ததால் மனவிரக்தியில் மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே உள்ள சென்னனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பொறியியல் நிறுவனம் நடத்தி வந்த இவரும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளாதேவி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களது காதலுக்கு மஞ்சுளாதேவியின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில் இருவரும் நண்பர்கள் உதவியுடன் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து மஞ்சுளாவின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு காதல் தம்பதியினர் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்றதும் மஞ்சுளாதேவியை தனியாக அழைத்து பேசிய போலீஸார் அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். மஞ்சுளாவுக்காக கோவிந்தராஜ் வாங்கி அணிவித்த நகைகள், தாலி முதற்கொண்டு அனைத்தையும் அவரிடம் கொடுத்து திரும்ப அனுப்பியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள கோவிந்த ராஜின் பெற்றோர் மஞ்சுளா தேவியின் பெற்றோர் மீதும், பஞ்சாயத்து பேசிய பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் கலந்து சென்றுள்ளனர்.