சமீபகாலமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் 2ஜி ஊழல் குறித்தும், சொத்து குவிப்பு வழக்கு குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கையும், அதிமுக ஆ.ராசாவின் 2ஜி வழக்கையும் பற்றி தொடர்ந்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இரு கட்சி இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தொண்டர்களின் மோதலாக மாறும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் 2ஜி வழக்கில் குற்றமற்றவர் என ஆ.ராசாவால் நிரூபிக்க முடியுமா என அதிமுகவினர் கேள்வி எழுப்பினர் தற்போது அதற்காக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வரும் ஆ.ராசா, 2ஜி வழக்கில் போதுமான ஆதாரங்களை சிபிஐ அளிக்கவில்லை என நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டி, 2ஜி வழக்கு என்பதே திட்டமிட்டு புனையப்பட்ட போலி வழக்கு என்று பேசியுள்ளார்.
மேலும் முன்னதாக அவர் ஜெயலலிதா குறித்து பேசியதற்கு ஆதரமாக நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதில் அரசியல் பணியில் உள்ளவர் இப்படி செய்வது வேதனையளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளதை காட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜெயலலிதா தவிர யாரும் அரசியல் பணியில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறாக தமிழகத்தின் இருபெரும் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை மோதலானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.