தமிழ்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விவகாரத்தில் விஜயேந்திரருக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.
சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செய்யாமல் மேடையில் அமர்ந்திருந்துவிட்டு தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜயேந்திரர் செய்தது தமிழுக்கும், தமிழன்னைக்கும் செய்த அவமரியாதை என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை ஆதீனம் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஞ்சி மடமும், விஜயேந்திரரும் தமிழை இந்த அளவுக்கு தான் மதிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.
விஜயேந்திரரின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த காஞ்சி சங்கர மடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் வழக்கம் இல்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாகவும், அதனால் தான் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும் கூறியது.
இந்நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ராமேஸ்வரத்திலுள்ள சங்கரமடத்திர்குள் நுழைய முயன்றனர். மேலும், விஜயேந்திரருக்கு எதிராக கோஷங்களும் அவர்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.