Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது - இயக்குநர் பாரதிராஜா

Advertiesment
தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது - இயக்குநர் பாரதிராஜா
, வியாழன், 25 ஜனவரி 2018 (09:29 IST)
‘தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது’ என தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

 
இயக்குநர் பாரதிராஜா சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது?  எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலிலே  ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசிய கவிஞர் வைரமுத்துவை அநாகரிமாகப் பேசிய மதவாதிகளைக் கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. குரல் கொடுப்பீர்களா?
 
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன்.  அந்தச் செம்மொழியை - மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? வாழ்வது தமிழ்மண். சுவாசிப்பது தமிழ்க்காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்யமாட்டேன் என்று தேசியகீதத்துக்கு மட்டும்தான் மரியாதை செய்வேன் என்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா?
 
அறிவார்ந்த தமிழ்க் கூட்டமே, நம் முதுகின்மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழிக்கவில்லையென்றால் உன் உயிரையும் உன் மொழியையும் அழித்து இனத்தையும் அழித்து வாழும் இந்த ஒரு கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு. எந்தத் தமிழனாவது புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய் . தமிழில் சொல் என்று போராடியிருக்கிறானா கோயில்களில். இல்லை. சமஸ்கிருதமொழியை அவமானப்படுத்தியிருக்கின்றானா. இல்லை.
 
நாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். ஆனால் நீங்கள்தான் எங்கள் பூமியில் வந்து வாழ்ந்து கொண்டு எங்களைப் புறக்கணிக்கின்றீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப் படித்ததுமில்லை. பழித்ததுமில்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷபாஷை என்று கூறுகின்றீர்கள். வர்ணாசிரமம்-மனுதர்மம் என்று மனிதர்களைப் பிரித்த இந்து மத வாதிகளே ... இன்று தமிழ்நாட்டில் தமிழையே தவிர்க்கின்றீர்களா? நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து... அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டாயா? தமிழ் நீஷபாஷை, சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட மறந்தது ஏன்?
 
தள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்ற வரலாறு தமிழ்நாட்டிலே உண்டு . தெரியுமா? தமிழ்நாட்டிலிருந்து கொண்டு தமிழர்களின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது. பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப் பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவன் நடுங்கிப் புலியெனச் செயல்செய்ய புறப்படு வெளியில் என்று பாடிய பாரதிதாசன் பாடலைப் போல், தமிழா ஒன்று சேர். தமிழா, தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.ஒன்று. ஒற்றுமைப்படு. தமிழால் இனத்தால் ஒன்று சேர். தமிழ் வாழ்க” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 வங்கிகளுக்குக் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு: எந்தெந்த வங்கிக்கு எவ்வளவு தெரியுமா?