மும்மொழிக் கொள்கை மட்டுமின்றி இருமொழிக் கொள்கையும் ஏமாற்றுதான் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மொழி போதும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், "மும்மொழிக் கொள்கை ஒரு மோசடி; இருமொழிக் கொள்கை ஏமாற்று; ஒரு மொழிக் கொள்கை தான் உன்னத கொள்கை" என்று கூறினார்.
உலகில் உள்ள அனைவருமே தங்களது தாய்மொழியில்தான் கல்வி பயில்கிறார்கள் என்றும், அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில்தான் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது என்றும் அவர் குறிபிட்டார்.
ஒவ்வொரு இனமும் தனது தாய்மொழியில் தான் இயங்குகிறது; தாய்மொழியை இழந்த இனம் வரலாற்றை இழந்திருக்கிறது."தமிழில் எழுத, படிக்க, பேச தெரியாமலேயே பட்டம் பெறலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில், "ஆங்கிலம் என்பது உலகின் தொடர்பு மொழி என்பதால், அதை கற்றுக் கொள்ளலாம். அதில் எந்த தடையும் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.