அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு என தனி நலவாரியத்தை அமைத்து தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இவ்வரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.08.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, "தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக்
(Gig) தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Platform Based Glg Workers' Welfare Board)" எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் (Gig) தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.