Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது- சசிகலா

தமிழக மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது- சசிகலா
, புதன், 27 டிசம்பர் 2023 (17:07 IST)
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிசாலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சசிகலா தெரிவித்துள்ளதாவாது:

''சென்னை எண்ணூரில் ஏற்கனவே கச்சா எண்ணெய் கடல்நீரில் கலந்ததால் இப்பகுதியில் உள்ள மீனவ சமுதாய மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதே பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தலைவலி, மயக்கம் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது.

தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக விசாரணை செய்யவேண்டும். இந்த விபத்து ஏற்பட காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவ உதவிகளை  உடனே வழங்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இதேபோன்று தண்டையார்பேட்டையில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து பெருமாள் என்பவர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் 4 நபர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த தீ விபத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகைகளை உடனே எடுக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக செய்யப்படுகின்றனவா? என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகள்  செய்கின்றனரா? என்பது தற்போது கேள்விக்குறியாகவிட்டது. திமுக ஆட்சி வந்துவிட்டாலே அனைத்து அரசு துறைகளும் செயலிழந்து போய்விடுகின்றன. இது தமிழகத்திற்கு வாய்த்த  சாபக்கேடு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.     இந்த விளம்பர ஆட்சியில் சென்னை எண்ணூர் பகுதி என்பது மக்கள் வாழ்வதற்கே தகுதியற்று போய்விட்டதோ? என்று எண்ணத்தோன்றுகிறது. திமுக தலைமையிலான அரசின் நிர்வாகத்திறமையின்மையாலும், மக்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமலும் ஒரு விளம்பர நோக்கத்தோடு செயல்படுவதாலும் இன்றைக்கு தமிழக மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

எனவே, திமுக தலைமையிலான அரசு வாக்களித்த மக்களுக்கு கொஞ்சமாவது அக்கறையோடு செயல்பட்டு, ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கின்றனரா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து தமிழகத்தில் வருங்காலங்களிலாவது இதுபோன்று விபத்துகள் எந்த பகுதியிலும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சிறைக்கு செல்வேனா? ஓபிஎஸ் தான் சிறை செல்வார்: எடப்பாடி பழனிசாமி