பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பச்சரிசி, சர்க்கரை, மற்றும் கரும்பு வழங்கியது. மேலும், இலவச வேட்டி, சேலையும் ரேஷனில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 9ஆம் தேதி முதல் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை 70% மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும், சிலர் வெளியூர் சென்றுவிட்டதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: "பொங்கல் விடுமுறை முடிந்த பிறகும் ரேஷனில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு இதுவரை வாங்காத பொதுமக்கள், ஊர் திரும்பியதும் ரேஷன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.