தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான அதானி நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனம் கூறிய டெண்டர் தொகை, மின்வாரிய பட்ஜெட்டிற்கு அதிகமாக இருப்பதால் அந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும், ஸ்மார்ட் மின் மீட்டர் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் என்றும் மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மத்திய அரசு நிதி உதவியுடன் தொடங்கப்பட இருக்கிறது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற அனைத்து இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்ட நிலையில், இந்த டெண்டரில் அதானி நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் பங்கேற்றன.
டெண்டரில் குறைந்த விலையை முன்மொழிந்து அதானி நிறுவனம் விண்ணப்பித்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.