துணை முதல்வர் உதயநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரின் துறைகளுக்கான மானியக் கோரிக்கையை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையின் அமைச்சரும் தங்களுக்கான கோரிக்கைகளை விளக்கி, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.
அந்த வகையில் இன்று துணை முதல்வர் உதயநிதி பொறுப்பில் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அவரின் உடல்நிலை காரணமாக, அவர் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "நேற்று கூட உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உதயநிதி சட்டசபைக்கு வந்தார். ஆனால், இன்று அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால், அவருக்குப் பதிலாக நான் இந்த மானியக் கோரிக்கையை முன்வைக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.