Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்க வேண்டும்- சீமான்

Advertiesment
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Sinoj

, வியாழன், 14 மார்ச் 2024 (14:58 IST)
தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டு 8 ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
 
தமிழ் கற்றல் சட்டம் 2006 – பிரிவு ‘3’ இன்படி, தமிழ்நாட்டில் 2006-07 ஆம் கல்வி ஆண்டிலிருந்து அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, பத்தாண்டுகளுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் பகுதி1-இல் தமிழ் மொழிப்பாடத் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.
 
ஆனால் அவ்வரசாணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடையும், பின் 2023ஆம் ஆண்டு வரை அத்தடையை நீட்டித்தும் உத்தரவிட்டது. இத்தனை தடைகளையும் கடந்து, ‘தமிழ் கற்றல் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்புக் கல்வி ஆண்டு முதலாவது நடைமுறைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு இந்த ஆண்டும் பிற மொழி பேரவையினரின் கோரிக்கையை ஏற்று 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ்ப் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
 
ஏற்கனவே தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ‘குழந்தைகள் தாங்கள் வாழும் மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களின் நலனுக்கு மிகவும் நல்லது; மாறாக வாழும் மாநில மொழியைக் கற்றுக்கொள்ள மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ எனவும், இதனால் பிற மொழியினரின் எந்த உரிமையும் பறிபோய்விடாது எனவும் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் கடந்த 8 ஆண்டுகளாக வெவ்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி வேண்டுமென்றே தமிழ்ப்பாடத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்குப் பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு விலக்கு அளிக்க எல்லைப்புற மாவட்டமான கிருஷ்ணகிரியில் தமிழ் மொழிப்பாட ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் உள்ளதை திமுக அரசே காரணம் காட்டுவது, அதன் நிர்வாகத் திறமையின்மையும், தமிழ் மொழி மீதான அக்கறை இன்மையையுமே காட்டுகிறது. தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் பெற்று இயங்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகள், தமிழைக் கற்பிக்க மறுப்பதும், அதற்கு திமுக அரசு துணைபோவதும் தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வசனங்கள் எல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது.
 
ஆகவே, ‘தமிழ் வாழ்க’ என்று அரசு கட்டிடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது; அதற்கு அரசு சட்டங்களில் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டில் வாழும் மக்களின் இதயச் சுவரில் எழுத வேண்டும் என்பதை திமுக அரசு இனியாவது உணர்ந்து, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஏஏ சட்டம்- எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல்- உள்துறை அமைச்சர் அமித்ஷா