ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்து அது வருவதற்கு தாமதம் ஆனதால் காவலருக்கும் டெலிவரி பாய்க்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார் ஜார்ஜ் பீட்டர். இவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு சென்ற பின்னரும் உணவு வரவில்லை. இது சம்மந்தமாக டெலிவரி பாய்க்கு அழைத்துக் கேட்டுள்ளார். அப்போது பேசிய டெலிவரி பாய் குறிப்பிட்ட ஏரியாவுக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிக்கலாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் போனிலேயே ஜார்ஜ் பீட்டர் கோபமாகி கத்த ஆரம்பித்துள்ளார்.
ஒரு வழியாக அரைமணிநேர தாமதத்துக்குப் பின்னர் டெலிவரி பாய் வந்து உணவைக் கொடுத்துள்ளார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த ஜார்ஜ் உணவை குப்பைத் தொட்டியில் போட்டதாகவும், மேலும் டெலிவரி பாயை தாக்க முயன்றதாகவும் பாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் டெலிவரி பாய் தன்னுடைய ஹெல்மெட்டால் ஜார்ஜின் தாடை மற்றும் கால் பகுதிகளில் தாக்கியுள்ளார்.
இதையடுத்து காவலர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஸ்கேன் செய்த போது எலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. காவலர் அளித்த புகாரின் பேரில் டெலிவரி பாய் கார்த்திக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். கார்த்திக் சொன்ன தகவலின்படி காவலர் குடித்துவிட்டு தன்னை தாக்க முயன்றதால்தான் தான் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளார். போலிஸார் இரு தரப்பு புகார்களையும் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.