ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கட்டுரையில் அவரை ஒரு ஆராய்ச்சியாளர் தேவதாசி என குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டினார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்களும், பாஜகவினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், வசை பாடியும், அவர் மீது வழக்கு தொடுத்தும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
வைரமுத்து தனது கட்டுரை குறித்தும், சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்து, அது புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகவும் கூறினார். ஆனாலும் வைரமுத்து மீதான விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. தன் மீதான வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை கவிஞர் வைரமுத்து தனது விளக்கத்தை மிகவும் தெளிவாகவும், உருக்கமாகவும் தனக்கே உரித்தான பாணியில் வீடியோ மூலம் தெரிவித்தார். அதில் தனது மனது இதனால் உடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால் சிலர் விடாமல் வைரமுத்து மீது தங்கள் கோபக்கணைகளை வீசித்தான் வருகிறார்கள்.
நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், கவிஞர் வைரமுத்துவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். வைரமுத்து வெளியிட்ட அந்த உருக்கமான வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வைரமுத்து தான் கூறிய தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை.
தான் கூறியது சரிதான் என முட்டாள்தனமாக வைரமுத்து பேசி வருகிறார். வைரமுத்துவின் மனம் காயம்பட்டால் என்ன படாவிட்டால் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வைரமுத்து காசுக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவார். அடிப்படை தமிழ் கூட தெரியாமல் இருக்கிறார் வைரமுத்து. அரசிடம் விருது வாங்கும் முயற்சியாகவே இந்த வீடியோவை வைரமுத்து வெளியிட்டுள்ளார் என எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.