சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இரு தரப்பினர் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும் நிலையில், அந்த மலையை காக்க சென்னையில் வேல் யாத்திரை நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து, இந்து முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, "சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது, இதில் தலையிட விரும்பவில்லை" என்று கூறி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.