ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஆளுனர் இதில் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது ஆளுனர் நடவடிக்கை குறித்து பேசிய நீதிபதிகள் “தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டால் அதற்கு ஒப்புதல் அளிப்பதுதான் அவரது பணியே தவிர, தன் தனிப்பட்ட கருத்துகளின் பேரில் முடிவெடுப்பதல்ல” என்று கூறியுள்ளனர்.
மேலும் “தமிழ்நாடு அமைச்சரவை முடிவு ஆளுனரின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும். 161வது சட்டப்பிரிவு மாநில அமைச்சரவைக்கும் இருக்கும் அதிகாரமாகும். ஜனாதிபதிக்கோ, ஆளுனருக்கோ மட்டுமே இருக்கும் அதிகாரம் அல்ல” என்று தெரிவித்துள்ளனர்.