நாமக்கல் அருகே சிக்கன் குழம்பு கெட்டுபோய் விட்டதாக கூறி, ரகளையில் ஈடுபட்ட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் ஆதரவாளர்கள், கடையில் இருந்த பிரியாணியை திருடிச் சென்று சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தலப்பாகட்டி பிரியாணி ஓட்டல் உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்த கடைக்கு வந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திருநங்கை ரோஸ் மற்றும் அவரது தோழி தங்களுக்கு பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறி ஓட்டல் நிர்வாகத்திடம் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ரோஸ் தனது ஆதரவாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கடைக்கு வரவழைத்தார். அங்கு வந்த அவரின் ஆதரவாளர்கள் கடைக்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், பிரச்சனையை சுமூகமாக முடிக்கும் வகையில் கடையை பூட்டிவிட்டதாக கூறி கடையின் முன்பக்க கதவின் சாவியை காண்பித்து அவர்களை சமரசப்படுத்தினர். பின் ரோஸ் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றுவிட்டன்ர்.
ஆனால் ரோஸின் ஆதரவாளர்கள் கடையின் பின்பக்க வாசல் மூலம் கடைக்குள் புகுந்து அங்கிருந்த பிரியாணி மற்றும் பொறித்த சிக்கனை சாப்பிட்டு விட்டு பணம் ஏதும் கொடுக்காமல் தப்பிச்சென்றனர். இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவை ருசித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டதில் ரோஸ் கூறியது அப்பட்டமான பொய் என தெரிவித்தனர். மேலும் ஹோட்டலின் பெயரை கெடுத்த ரோஸை விசாரணைக்கு அழைக்க சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.