காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கிட்டத்தட்ட 3 வருடங்களாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டம் செய்து வரும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்த பகுதி மக்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி 19 அல்லது 20-ஆம் தேதி பரந்தூர் கிராம மக்களை விஜய் சந்திக்க அனுமதி கேட்டு, தமிழக டிஜிபி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவை பரிசீலனை செய்த போலீசார், பரந்தூர் கிராம மக்களை சந்திக்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்றும், இனி மேலும் அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் இருப்பதாகவும் தமிழக வெற்றி கழக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்றால், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் போராட்ட குழுவினரை சந்தித்து அவர்களின் கருத்தை கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.