ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜெ.விற்கு நெருக்கமானவர்கள், சசிகலாவின் உறவினர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. ஜெ.வின் சிகிச்சை குறித்த வீடியோ வெளியானதால் கிருஷ்ணபிரியாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதேபோல், தினகரன், சசிகலாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிலையில், ஜெ.வின் சிகிச்சை தொடர்பான 4 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை தினகரனின் வழக்கறிஞர் நேற்று ஆறுமுகச்சாமியிடம் வழங்கினார்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெ. மரணம் அடைந்த பின் ஜெ.வின் உடலை எம்பாமிங் செய்த சென்னை மருத்துவ கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குனர் சுதா சேஷய்யனுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. எனவே இன்று அவர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ கடந்த வரும் டிசம்பர் 5ம் தேதி இரவு என்னை மருத்துவமனைக்கு அழைத்து ஜெயலலிதாவிற்கு எம்பாமிங் செய்ய சொன்னார்கள். எனவே, எனது தலைமையிலான மருத்துவக்குழு சுமார் 20 நிமிடங்களில் அவருக்கு எம்பாமிங் செய்தோம். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த போது ஒரு நாளும் நான் அவரை சந்திக்கவில்லை” என சுதா சேஷய்யன் கூறினார்.