நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி அரசியலுக்கு வந்தபோது தமிழக அரசியல் சூடு பிடிக்க துவங்கியது.
ஏனெனில் விஜயகாந்த் மறைந்த பின் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ரஜினி வராமலேயே போனார். கமலுக்கு எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடந்தபோது இரண்டிலுமே 8 லட்சம் முதல் 10 லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொண்டனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது
அதோடு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று மக்களை சந்தித்து பேசுவதை விஜய் துவங்கினார். அப்படி அவர் கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் விஜயையும், தவெக-வையும் முடக்கிப்போட்டது. இதற்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என திமுகவினர் குற்றம் சாட்டினர். ஆனால் இது திட்டமிட்ட சதி என்பது போல ரியாக்ட் செய்தார் விஜய்.
திமுகவினர் விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கியதுமே அலர்ட்டான அதிமுகவும், பாஜகவும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க துவங்கினர். கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க தமிழக அரசுதான் பொறுப்பு. அரசு மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என அவர்கள் சொன்னார்கள்.
அதோடு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜயை அதிமுக கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகளும் நடந்தது. செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விஜய் அதிமுக கூட்டணியில் சேராமல் ஒருவேளை வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக கட்சியையே அவர்கள் அழித்து விடுவார்கள் என்று பேசினார். ஒருபக்கம் செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விஜய் அதிமுக கூட்டணியில் இணைவது அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது. அவரின் கட்சி நிர்வாகிகளுக்கு சரியான பயிற்சி இல்லை.
அந்த பயிற்சியை அதிமுகவினர் கொடுப்பார்கள். அதேநேரம் அவர் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. அதிமுக 150 தொகுதியில் வெற்றி பெறும். விஜயும் வந்தால் 220 கூட்டணியில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். அதாவது விஜய் கூட்டணியில் இணைந்தால் அதிமுக கூட்டணி 70 தொகுதிகள் அதிகமாக ஜெயிக்கும் என்பது போல அவர் பேசியிருந்தார்.
ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியும் பிரச்சார கூட்டங்களில் பேசும்போது தவெக தங்களுடன் கூட்டணி அமைக்கும் என மறைமுகமாக பேசினர்.
ஆனால் விஜயோ அமைதியாக இருந்தார். அதிமுக தரப்பில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் பவர் இல்லாத அந்த பதவியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விஜய் தனது நெருங்கி வட்டாரங்களில் சொன்னதாகவும் செய்திகள் கசிந்தது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை பெறும். அது திமுகவுக்கு சாதகமாகவே அமைந்து அந்த கட்சி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புண்டு. விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தால் திமுக தோல்வியடைய அதிக வாய்ப்பிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் சொன்னார்கள். இந்நிலையில்தான் சென்னை மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இன்று கூடிய சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தவெக சொல்லி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
விஜயின் இந்த முடிவு அதிமுக, பாஜக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க விரும்பினால் எங்களுடன் இணையுங்கள் என அந்த கட்சிகள் சொல்லியும் விஜய் இந்த முடிவு எடுத்திருக்கிறார்.
அதேநேரம் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் விஜயின் முடிவு மாறுமா? அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.