திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க.அழகிரியால் திமுகவுக்கு சிக்கல் வரும் என ஏற்கனவே எதிர்பார்த்தபடி, வரும் 28ஆம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வுசெய்யப்படவுள்ள நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப்பேரணியை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
இந்த பேரணியில் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று மு.க.அழகிரி அறிவித்துள்ளதால் திமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் சென்னையில் அழகிரி நடத்தும் பேரணியில் திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்க்ள் யாரும் பங்கேற்கக் கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அழகிரியின் பேரணியை முறியடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாகவும், இதற்காக ஸ்டாலினே களத்தில் இறங்கி அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது