திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்று விரைவில் மக்களை சந்திப்பார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், காவிரி மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோபாலபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு காய்ச்சல் மற்றும் சீறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் மருத்துவனை சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவரின் உடல் நலம் குறித்து தமிழக அரசியல் தலைவர் நேரில் சென்று ஸ்டாலினிடம் விசாரித்து வருகின்றனர். அதேபோல், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு உள்ளிடோரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என டிவிட் செய்துள்ளனர்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு நன்றி. எனக்கு உதவி செய்வதாய் கூறிய அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தலைவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து அவராகவே உங்களுக்கு நன்றி சொல்வார்” என ஒரு பதிவிலும், எல்லோரையும் விரைவில் அவர் சந்திப்பார் என மற்றொரு பதிவிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.