ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் இன்று தமிழகம் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு கட்டமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது சம்மந்தமாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம். கொரோனா என்னும் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். தினசரி பாதிப்பு 36000 ஆக இருந்த நிலையில் இப்போது 4000க்கும் கீழ் வந்துள்ளது. எந்த அலையையும் தாங்குகிற வல்லமை இந்த அரசுக்கு உண்டு.அந்த நம்பிக்கை தமிழ்நாடு மக்களுக்கும் உண்டு என்பதை அறிவேன். நான் மக்களிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். தளர்வுகள் இருப்பதால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஊரடங்கால் மக்கள் மற்றும் அரசின் பொருளாதாரம் சுணக்கம் அடைவதால்தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் முழுமையாக ஒழிக்கவில்லை. தடுப்பூசிதான் ஒரே ஆயுதம். இன்னும் தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.