Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் நான்: முக ஸ்டாலின்

பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் நான்: முக ஸ்டாலின்
, திங்கள், 13 ஜூலை 2020 (20:38 IST)
பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் நான்: முக ஸ்டாலின்
கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக நான் வழங்கும் ஆலோசனைகளை முதலமைச்சர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தொடர்ச்சியாக நடந்துவரும் ஊரடங்கினால், மக்களுக்கு வாழ்வாதார இழப்பும்; வாழ்க்கையில் பெரும் பின்னடைவும்; மாவட்டங்களில் கடுமையான நோய்த் தொற்றும்; மக்களை, திரும்பிய பக்கமெல்லாம் சுற்றி வளைத்திடும் சோதனைகள் திரண்டு மிரட்டி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
 
கொரோனா நோய்த் தொற்று குறித்த விவரம் அ.தி.மு.க. அரசுக்கு ஜனவரி மாதத்திலேயே தெரிந்திருந்தும், பரீட்சார்த்த முறையிலான நடவடிக்கைகளில் ஒவ்வொன்றாக ஈடுபட்டு, அடுத்தடுத்து செய்த தவறுகளாலும், குழப்பங்களாலும் - தற்போது மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் விபரீதமாகி, மக்களை நிம்மதியிழக்க வைத்து, அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
 
பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமின்றி, எந்தவொரு அரசியல் கட்சியின் ஆலோசனைகளையும், காது கொடுத்துக் கேட்கும் ஜனநாயகப் பக்குவம் இன்றி நிராகரித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் மனமில்லாமல் மறுத்து - தன்னிச்சையாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டதால், இன்று கொரோனா நோய்த் தொற்று 'கிராமப்புற பரவலாக' மாறி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.
 
இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு, அரைகுறை வாழ்க்கை நிலை நான்கு மாதத்திற்கும் மேல் நகருவது தொடர்கிறது.
 
இந்தச் சூழ்நிலையில், பொறுப்புள்ள பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், மருத்துவ - பொருளாதார - தொழில்துறை வல்லுநர்களைக் காணொலிக் காட்சி மூலம் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துரைகளைக் கேட்டேன். அதில், 'உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை', 'தொலை நோக்காக நிறைவேற்ற வேண்டியவை' என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சேர்ப்பது எனது கடமை என்ற அடிப்படையில் இங்கு முன்வைக்கிறேன்.
 
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆலோசனைகள்:
 
1) ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினைச் சமாளிப்பதற்கு, 'அனைவருடைய கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கத்' தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்.
 
2) ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்த 1000 ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாகப் பணமாக வழங்கப்பட வேண்டும்.
 
3) ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதை முறைப்படுத்தலாம். ஆனால் அறவே தடை செய்யக் கூடாது. பொருட்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.
 
4) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.
 
5) ஏராளமான வணிக அமைப்புகள் மூடப்பட்டுள்ளன. பல செயல்பட இயலாமல் உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆதலால், கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்திட வேண்டும்.
 
6) அரசாங்கம் அதன் மூலதனச் செலவினங்களைச் சுகாதாரத் துறையிலும், தேவையான பிற தேவைகளிலும் அதிகரிக்க வேண்டும். இது பணப்புழக்கத்தை மேம்படுத்துவதோடு தற்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்கும் உதவும்.
 
7) ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றி அமைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். தற்போதைய ஜி.எஸ்.டி. கட்டமைப்பில், மத்திய அரசு மிக நீண்ட நிலுவைத் தொகையைக் கொண்டிருப்பதால், மாநில அரசுகளுக்குச் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆதலால், கொரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.
 
தொலைநோக்கு பரிந்துரைகள்:
 
1) தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பொதுவான வருமான கட்டமைப்புத் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதன்மூலம் நெருக்கடி நேரங்களில் மட்டுமில்லாமல் மற்ற காலங்களிலும் அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை நிதிப் பாதுகாப்பை வழங்கிட முடியும்.
 
2) அனைவரும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே இலவச மருத்துவ வசதிகள் உள்ளதால், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிறந்த மருத்துவ வசதிகளை ஏழைகள் பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அரசு இலவச மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு முழுமையான சமூகப் பாதுகாப்பை வழங்கும். அது எதிர்கால நெருக்கடிகளின் போது அவர்களின் பிரச்சினைகளைத் தணிக்க உதவும்.
 
கொரோனா நோய்த் தொற்றைக் குறைத்து- அந்த நோயை அறவே தமிழகத்தில் ஒழித்திடவும் - கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பின்னடைவுகளில் இருந்து மீண்டு - இயல்பு நிலை திரும்புவதற்கும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகள் மிகவும் ஆக்கபூர்வமானவை என்றே நான் கருதுகிறேன்.
 
ஆகவே, அவர்களுடைய ஆலோசனைகளை இந்த அறிக்கை வாயிலாக வெளியிட்டு இருக்கிறேன். எத்தனையோ ஆலோசனைகளை அவ்வப்போது தெரிவித்தும்கூட - "பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக என்ன சொன்னார் ஸ்டாலின்” என்று, வெறுப்பு - விரோதத்துடன் 'கொரோனா பேரிடர் நேரத்திலும்' காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதைத் தவிர்த்து - கருணை மிகுந்த அணுகுமுறையை வளர்த்துக் கொண்டு, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ள மேற்கண்ட ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கை மீறிய...அமைச்சர் மகனிடம் ஆவேசமாகப் பேசிய பெண்காவலர் வைரல் வீடியோ