பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலவை போயஸ் தோட்டத்திற்கு சென்று சந்தித்தது குறித்து பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புகைப்பட உதவி: ’தி இந்து’
அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளேடான ’டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிக்கையில் 10 பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்களும், அண்ணா பல்கலைகழகத்தின் பதிவாளரும் சசிகலாவை சந்தித்த செய்தி குறித்து ’தி இந்து’ பத்திரிக்கையில் விரிவாக அலசப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், அரசியல் விமர்சகர்களும் சசிகலாவைச் சந்தித்தது குறித்து சந்தேகம் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து சுப.உதயகுமார் அவர்களும் கடுமையாக சாடி உள்ளார்.
இது குறித்து சுப.உதயகுமார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
தூக்கியெறிய வேண்டும் இந்த துணை வேந்தர்களை!
தமிழன் தரம் தாழ்ந்து போக முக்கிய காரணம் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அல்ல. இதோ இந்தப் படத்தில் நிற்கும் தரம்கெட்ட, மானம்கெட்ட கல்வியாளர்கள்தான். இந்தக் கூட்டம் ஐந்து கோடி, எட்டு கோடி என்று லஞ்சம் கொடுத்து துணை வேந்தர் பதவியைப் பெறுகிறார்கள். பின்னர் போகிறவன், வருகிறவனிடம் எல்லாம் காசு பிரிக்கிறார்கள்.
கல்வித் தரம் பற்றியோ, மாணவ மாணவியர் வருங்காலம் பற்றியோ கவலைப்படுவதில்லை. எந்த அடிப்படையில் இவர்கள் சசிகலா என்கிற தனிப்பட்ட நபரை சந்திக்கிறார்கள்? ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டுமென்றால், கல்வி அமைச்சரைப் பார்க்கலாம், முதல்வரைப் பார்க்கலாம்.
சசிகலா ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களாம் இந்தக் கையாலாகாதவர்கள். இவர்களின் விருப்பம் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் நான்கரை ஆண்டுகள் தொடர வேண்டும்; இவர்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான்.
அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் இவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும், இவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரும் இவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.