Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் ‘நன்றி மோதிஜி’ விளம்பரங்களில் செய்த செலவு 18 கோடி ரூபாய்!

Advertiesment
modi advertisements
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (10:39 IST)
குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் ‘நன்றி மோதிஜி’ விளம்பரங்களில் செய்த செலவு 18 கோடி ரூபாய்!
 
பாஜக ஆளும் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த விளம்பரங்களுக்கு செய்யப்பட்ட மொத்த செலவு - 18 கோடியே 3 லட்சத்து 89 ஆயிரத்து 252 ரூபாய்.
 
குஜராத் அரசு 2 கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 410 ரூபாய் செலவு செய்தது.
 
உத்தரகாண்ட் அரசு 2 கோடியே 42 லட்சத்து 84 ஆயிரத்து 198 ரூபாய் செலவு செய்தது.
 
கர்நாடக அரசு ரூ.2 கோடியே 19 லட்சம் செலவு செய்தது.
 
ஹரியாணா அரசு ரூ.1 கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 490 செலவு செய்தது.
 
இந்த விளம்பரங்களின் நோக்கம் அரசியல் ஆளுமையின் பிம்பத்தை விளம்பரப்படுத்துவதே என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனுடன், இது பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதாகாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
குஜராத்தில் டிசம்பர் 1, 5 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு, 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். அதே நேரத்தில் டெல்லியில் எம்சிடி (டெல்லி மாநகராட்சி) தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்த முறை டெல்லியில், 15 ஆண்டுகளாக எம்சிடியில் நடந்து வரும் தனது ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது, அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்துடன் சேர்ந்து டெல்லியின் எம்சிடி தொகுதிகளையும் கைப்பற்றத் தயாராகி வருகிறது.
 
எம்சிடி தேர்தலையொட்டி, டெல்லியில் பல இடங்களில் பாஜக விளம்பரங்களை வைத்துள்ளது, அதில் ஒன்று, "சேவை ஒன்றே நோக்கம், வெற்று பிரசாரம் அல்ல" என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, பாஜக சேவையில் நம்பிக்கை கொண்ட கட்சி என்றும் பொய்ப் பிரசாரம் செய்யும் கட்சி அல்ல என்றும் கூறுகிறது.
 
ஆனால் கொரோனா தொற்றுநோய் காலத்திலும் அதற்குப் பின்னரும் பாஜக ஆளும் சில மாநிலங்களில் செய்யப்பட்டு வரும் பிரசாரங்களைப் பார்த்தால், இந்த கூற்றுக்கு நேர்மாறாக உள்ளது.
webdunia
குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக 'பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி' தெரிவிக்க மொத்தம் ரூ.18 கோடியே 3 ஆயிரத்து 252 செலவழித்துள்ளதாக பிபிசி குஜராத்தி சேவை, தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்திக் கண்டறிந்துள்ளது.
 
ஆனால், அரசு விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், 'எந்தவொரு அரசியல் ஆளுமையையும் துதிபாடுவதாக இருக்கக்கூடாது' எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சட்ட வல்லுநர்கள் இதை 'விசித்திரமானது' என்றும், 'அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பை நிறைவேற்றியதற்காக' பிரதமருக்கு மாநில அரசுகள் ஏன் 'நன்றி' கூற வேண்டும் என்றும் ஆச்சரியப்படுகிறார்கள்.
 
இந்த விளம்பரங்கள் வெளியான விவகாரத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜக சார்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அனைத்து மாநில அரசுகளும் விளம்பர விவகாரத்தில் எந்தப் பதிலையும் தராமல் மௌனம் காத்து வருகின்றன.
 
விளம்பரங்கள் கூறுவது என்ன?
 
பிபிசி குஜராத்தி சேவையால் தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை) விண்ணப்பத்தில் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிலை ஆய்வு செய்ததில், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆளும் அரசுகள், கொரோனா தடுப்பூசியை ஊக்குவித்ததற்கும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், குழாய்வழிக் குடிநீர்த்த் திட்டம் போன்றவற்றிற்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விளம்பரங்கள் வெளியாகியுள்ளது.
 
குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் 'அனைவருக்கும் தடுப்பூசி, இலவச தடுப்பூசிக்கு நன்றி மோடிஜி' என்ற விளம்பரங்களை வெளியிட பல கோடி ரூபாய் செலவு செய்ததும் தெரியவந்துள்ளது.
 
ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின்படி குஜராத் அரசு சுமார் ரூ.2 கோடியே 10 லட்சமும், உத்தரகாண்ட் அரசு ரூ.2 கோடியே 42 லட்சமும், ஹரியானா அரசு ரூ.1 கோடியே 37 லட்சமும், கர்நாடகா அரசு ரூ.2 கோடியே 19 லட்சமும் செலவு செய்துள்ளன.
 
இது குறித்து பிபிசி ஆர்டிஐயிடம் தகவல் கேட்டுள்ளது. ஜூன் 21, 2021 முதல், 'அனைவருக்கும் தடுப்பூசி, இலவச தடுப்பூசி திட்டத்துக்கு மோதிஜிக்கு நன்றி' என்ற விளம்பரம் பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியானதில் அரசுகளுக்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு என்று கேட்டது.
 
இதேபோன்று பல்வேறு மொழிகளில் விளம்பரங்களை வெளியிடுவதற்குச் செலவழிக்கப்பட்ட தொகை பற்றிய தகவலையும் பிபிசி கோரியது. இதனுடன், இந்த விளம்பரங்கள் மற்றும் விளம்பர பிரச்சாரங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிரிப்டுகள் மற்றும் செய்திகளின் நகல்களும் கோரப்பட்டன.
 
குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளிடம் இந்தத் தகவல் கோரப்பட்டது.
 
ஆர்டிஐ விண்ணப்பம் மூலம், இந்த விளம்பரங்கள் மற்றும் விளம்பர பிரச்சாரங்களுக்காகப் பொது இடங்களில் செய்திகளைத் தெரிவிக்கும் போர்டுகள், விளம்பர பலகைகள் மற்றும் ஊடகங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று பிபிசி கேட்டிருந்தது.
 
தில்லியிலும் ‘ஜல்ஜீவன் திட்டம்’, வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்காகப்பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விளமபரங்கள் வெளியாயின.
 
மார்ச் 1, 2022 முதல் இதுவரை இந்த பிரச்சாரங்களின் கீழ் செலவிடப்பட்ட தொகை பற்றிய தகவலை பிபிசி கோரியது.
 
கடந்த ஆண்டு, 'கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி' என்று விளம்பரம் செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகின.
 
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊடக விளம்பரங்களை வெளியிடுமாறு மாநில அதிகாரிகள் மத்திய அரசால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
 
பிபிசி குஜராத்தி, பாஜக அல்லாத சில மாநிலங்களிலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா என்பதை அறிய ஆர்டிஐ தாக்கல் செய்தது.
 
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் விதமாக, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா (ஜூன் 2021 இல் பாஜக அல்லாத அரசாங்கம் இருந்தது) "இந்த மாநிலங்களின் அரசாங்கங்களால் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை" என்று கூறியது.
 
மேலும், 'குழாய் மூலம் குடிநீர்' திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆகியவற்றுக்கான விளம்பரங்களில், 'பிரதமர் மோடிக்கு நன்றி' தெரிவிக்க, 9,94,35,154 ரூபாய் செலவு செய்துள்ளதாக மத்திய பிரதேச அரசு சமீபத்தில் தெரிவித்தது.
 
‘பொதுமக்களின் பணம் துஷ்பிரயோகம்’
அரசியல் ஆய்வாளரும், பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழின் அரசியல் ஆசிரியருமான சித்தார்த் கல்ஹன்ஸ், இந்த விளம்பரங்களை 'பொதுப் பணத்தை வீணடிப்பது' என்று வர்ணிக்கிறார்.
 
“கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக ஆட்சியில் ஏதோ ஒரு திட்டம் அல்லது முன்முயற்சியை முன்னிறுத்தி மக்கள் முன் பிரதமரின் பிம்பத்தை உயர்த்திக்காட்டும் ஒரு போக்கு காணப்படுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இதற்காக மக்களின் பணம் செலவிடப்படுகிறது. அரசின் அல்லது பிரதமரின் பணியை விளம்பரப்படுத்த இனி தேர்தலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விளம்பரங்களுக்கென்று தனி நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்கிறார் சித்தார்த் கல்ஹன்ஸ்.
 
அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான திலீப் படேல், இந்த விவகாரம் குறித்த தனது கருத்தைத் தெரிவிக்கையில், “இத்தனை மாநிலங்களில் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டால், அவர்கள் அதைச் செய்ய மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அர்த்தம். இதுபோன்ற விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம் பிரதமரை 'சர்வ வல்லமை படைத்தவர்' என்று முன்னிறுத்துவதுதான்.” என்கிறார்.
 
இது போன்ற விளம்பரங்களின் பயனற்ற தன்மையைப் பற்றி அவர் விளக்குகிறார், "இதுபோன்ற விளம்பரங்கள் ஒரு அரசியல் பிரமுகரின் பிம்பத்தைக் கட்டமைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன, உண்மையில் விளம்பரஙாள், சாமானியனின் சிரமங்களைத் தீர்ப்பதில்லை. இதில், பொது நலத்துக்கான திட்டமிடுதல் அல்லது மேம்படுத்துதல் ஆகிய எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை."
 
இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை அறிய, பிபிசி குஜராத்தி, அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரைத் தொடர்புகொண்டது. இது குறித்த முழு விவரம் தனக்குத் 'தெரியாது' என்றும், 'இது கட்சி சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை' என்றும் மின்னஞ்சல் மூலம் அவர் பதிலளித்தார்.
 
இது தவிர, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, கர்நாடகா மாநில தலைமைச் செயலர்களிடம் இது குறித்து விளக்கம் அளிக்கக்கோரியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
 
சட்டத்தின் பார்வையில்இந்தியாவின் புகழ்பெற்ற சட்டக் கல்வி நிறுவனமான தேசிய சட்டப் பள்ளியின் சட்ட நிபுணரும், உதவிப் பேராசிரியருமான நந்திதா பத்ரா, 'நன்றி மோடி' விளம்பரங்கள் 'வியப்பூட்டுபவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
'நன்றி மோடிஜி' விளம்பரங்கள் நாட்டின் அரசியல் பின்னணியில் இயங்கும் தனிமனித அரசியலின் நீட்சி என்று அவர் குறிப்பிட்டார்.
 
"அரசாங்கம் தனது கடமையான அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றியதற்காக தனது சொந்தப் பிரதமருக்கு நன்றி சொல்வது விசித்திரமாகத் தெரிகிறது! பொதுச் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரச்சாரம் குறித்த சட்டத்தின் பார்வை பற்றிய கேள்வி எழுவது இயற்கையானது."
 
விளம்பரங்களின் சட்ட அம்சம் குறித்து நந்திதா பத்ரா மேலும் கூறும்போது, “காமன் காஸ் வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (2015) வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசின் சாதனைகள் விளம்பரப் பொருளாக இருக்கக் கூடாது, மக்கள் தாமே உணரக்கூடிய வகையில் அவற்றின் செயல்பாடு இயல்பாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுபோன்ற விளம்பரங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியையும் மேற்கொள்வதால் இவை அனுமதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.” என்றார்.
 
"அரசியலமைப்புப் பதவியிலிருப்பவர்களின் புகைப்படங்களை இதுபோன்ற விளம்பரங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது, ஆனால் பொது நலன்களின் அடிப்படையில் அதை அனுமதித்தது. எனவே, இதுபோன்ற விளம்பரங்கள் பொது நலன் சார்ந்த விஷயமாக கருதப்படுகிறது."
 
மேலும் அவர், "இந்த விளம்பரங்கள் அனைத்தையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கொரோனா தடுப்பூசி விளம்பரத்தின் நோக்கம் தடுப்பூசி பற்றி மக்களுக்குச் சொல்வது என்றால், அது சரியானது, ஆனால் 'நன்றி மோடி ஜி' என்ற செய்தி தேவையில்லாதது. அதனால்தான் இந்த வகையான கலப்பு விளம்பரங்களைப் பாதி நியாயமானவை என்று அழைக்கலாம்." என்கிறார்.
 
மேலும் அவர் மேலும் கூறுகையில், “மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த விளம்பரப் பிரச்சாரங்கள் அனைத்தும் சிக்கனமான முறையில் செயல்படுத்தப்பட்டதா என்பதுதான். ஆனால் இந்த விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்ட பணத்தின் அளவைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. முற்றிலும் பொதுமக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதைத் தான் காட்டுகிறது.” என்றார்.
 
இந்த விளம்பரத்தின் சட்ட அம்சத்தை விளக்கிய நந்திதா பத்ரா, "இந்த வகையான விளம்பரங்கள் பொது நலனை விடுத்து, அரசியல் நலன்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்களைப் பெற ஒரே வழி உயர் நீதி மன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்வதுதான்." என்கிறார்.
 
அரசு விளம்பரங்கள் குறித்த உச்ச நீதி மன்ற வழிகாட்டுதல்இந்திய உச்ச நீதிமன்றத்தில் காமன் காஸ் அண்ட் சென்டர் ஃபார் பப்ளிக் என்ற அமைப்பால் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசாங்கத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் பொதுப் பணத்தை நியாயமான மற்றும் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அதன் கண்காணிப்புக்கான வழிகாட்டுதல்களை அது கோரியது. இதற்காக நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.
 
அரசு விளம்பரங்களில் அரசியல் நடுநிலைமையைக் கடைபிடிக்க வேண்டும் என இக்குழு தயாரித்துள்ள வழிகாட்டுதல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல்வாதியையும் துதிபாடும் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு நேர்மறை பிம்பத்தை காட்டவும், எதிர்கட்சிக்கு எதிர்மறையான பிம்பத்தை காட்டவும் பொதுப் பணத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கூடுதலாக, மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்கள் ஆட்சியின் குறிப்பிட்ட நாட்கள் அல்லது ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
 
இருப்பினும், நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, இதுபோன்ற விளம்பரங்களின் நோக்கம் பிரச்சாரமாக இருக்கக்கூடாது என்றும் மாறாக, அரசாங்க நடவடிக்கைகளின் பலன்களைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் முயற்சியாக இருக்க வேண்டும்.
 
அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதே அரசு விளம்பரங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
 
எனவே, பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்தை ஏற்றாலும் அரசியல்வாதியைத் துதி பாடுவதை இந்த வழிகாடுதல் அனுமதிக்கவில்லை.
 
இருப்பினும், இந்த வழிகாட்டுதல்கள் எந்த அளவிற்குப் பின்பற்றப்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருக்கின்றது.
 
 

 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி உயர்ந்ததா?