சரவண பவன் ராஜகோபால் ஒருநாள் கூட சிறைதண்டனை அனுபவிக்காமல் மரணம் அடைந்துவிட்டார் என ஜீவ ஜோதி ஆதங்கம் அடைந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
சரவண பவன் ராஜகோபால் தன் கடையில் பணிபுரிந்த மேலாளரின் மகள் ஜீவஜோதியை அடைய நினைத்தார். ஆனால் ஜீவஜோதிதான் காதலித்து வந்த பிரின்ஸ் சாந்தகுமாரை கரம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் கூல்லிப்படையை ஏவி பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்தார்.
இந்த வழக்கில் சிக்கிய ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்தது. அதன் பின்னர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டையை உறுதி செய்ததோடு ஜூலை 7 ஆம் தேதிக்குள் ராஜகோபாலை சரணடைய உத்தரவிட்டது.
ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி அவர் சரண் அடைய அவகாசம் கேட்டு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் கடந்த 9 ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜகோபால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இது குறித்து ஜீவ ஜோதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அதில், நான் என் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை துவங்கினேன். ஆனால் ராஜகோபால் அநியாயமாக எனது கணவரை கொலை செய்துவிட்டார்.
இதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஒருநாள் கூட சிறை தண்டனை அனுபவிக்காமல் மரணம் அடைந்துவிட்டார். என் வாழ்வில் இது ஆறாத வடுவாக அமைந்துவிட்டது என ஜீவ ஜோதி ஆதங்கல் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.