Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லா பேருந்து நிலையத்திற்கும் கருணாநிதி பெயரா? மன்னார்குடி பேருந்து நிலைய பெயர் மாற்றத்திற்கு சீமான் கண்டனம்!

Advertiesment
Seeman

Prasanth Karthick

, ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (12:44 IST)

மன்னார்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படுவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

திமுக அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் தொகுதியான மன்னார்குடியில் செயல்பட்டு வந்த பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் கண்ணியமிக்க ஐயா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி ஆகியவைச் சீரமைப்புச் செய்து, புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும்  மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, ஐயா கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

 

அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு ஐயா கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய திமுக அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அறிவித்தது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்  தமிழத்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும். 

 

ஆகவே, மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூட்டணியில் பாமக? விடுதலை சிறுத்தைகள் விலகுகிறதா? முதல்வர் விளக்கம்..!