Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா?'' அன்புமணி ராமதாஸ் கேள்வி

'எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா?''  அன்புமணி ராமதாஸ் கேள்வி
, சனி, 10 ஜூன் 2023 (14:07 IST)
'எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா?  வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!' என்று பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 
 
''சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள ஏறக்குறைய 600 மரங்களை வெட்ட  முடிவு செய்யப்பட்டிருப்பதும், அவற்றில் சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதும்  அதிர்ச்சி அளிக்கிறது.  எழும்பூர் தொடர்வண்டி நிலைய வளாகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் 50 முதல் 80 ஆண்டுகள் வயதுடையவை ஆகும். பல மரங்கள் நூறு ஆண்டுகளை கடந்தவை. பாதுகாக்கப்பட வேண்டிய மரங்களை  வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
 
சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ரூ. 734.91 கோடியில் நவீனமயமாக்கப்படுவதும்,  அதன் ஒரு கட்டமாக சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதும் வரவேற்கத்தக்கது.  இந்தத் திட்டத்தின் மூலம்  உலக சுற்றுலா வரைபடத்தில் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு முதன்மைத்துவம் கிடைக்கும். இத்தகைய திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. ஆனால், நவீனமயமாக்கம் என்ற பெயரில் விலைமதிப்பற்ற மரங்களை மரங்களை வெட்டி வீழ்த்துவதை  ஏற்க முடியாது.
 
மரங்கள் மனிதர்களை உயிர்வாழ வைப்பவை என்ற உண்மையை உலக நாடுகள்  உணர்ந்திருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் எந்த மரமும் வெட்டி வீழ்த்தப்படுவதில்லை. மாறாக அவை வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றன. அதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. அவற்றை இந்தியாவில் செயல்படுத்த தொடர்வண்டித்துறை போன்ற  நிறுவனங்கள் மறுப்பது ஏன்? எனத் தெரியவில்லை.
 
 எழும்பூர் தொடர்வண்டி நிலைய வளாகத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் அப்பகுதியில் நுரையீரல்களாக திகழ்கின்றன. பல்லாயிரக்கணக்கான பறவைகளுக்கு அவை இருப்பிடமாக திகழ்கின்றன.  அந்த மரங்களை வெட்டாமல் எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாது என்பதையும் நான் அறிவேன்.  ஆனால், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், வெட்டப்படும் மரங்களை வேறு இடத்தில் நடவும் முடியும்.  அதற்கான மாற்றுத் திட்டங்கள் உள்ளன. ஆனால், நவீனமயமாக்கல் திட்டத்திற்கும்,  அதற்காக மரங்களை வெட்டுவதற்கும்  அனுமதி கிடைத்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆராய முடியாது என்று தொடர்வண்டித்துறை பிடிவாதம் பிடிப்பது நியாயமற்றது.
 
எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்காக கட்டப்படும் கட்டிடங்களின் வடிவமைப்பை சற்று மாற்றியமைப்பதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கலாம்.  வெட்டப்படும் மரங்களை தொடர்வண்டித்துறையின் செலவில் அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் திடல்கள், பூங்காக்கள் ஆகியவற்றில்  நட்டு பராமரிக்க முடியும். அதேபோல், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் நடைமுறையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையும் கடைபிடிக்கிறது. ஆனால், இதில் எந்த நடைமுறையையும் பின்பற்ற முடியாது என்று தொடர்வண்டித்துறை கூறுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
 
புவி வெப்பமயமாதல் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் நிலையில், தொடர்வண்டித்துறை சமூகப் பொறுப்புடனும், சுற்றுச்சூழல் மீதான அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.  அதன்படி,  எழும்பூர் தொடர்வண்டி நிலைய நவீனமயமாக்கலுக்காக  வெட்டப்படவிருக்கும் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல், வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நட்டு வளர்த்தல்,  வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் ஆகிய மாற்று வழிகளில் சாத்தியமானவற்றை  தொடர்வண்டித்துறை செயல்படுத்த வேண்டும்; தொடர்வண்டித்துறையிடம் இதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்!'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அடுத்த மாதம் அணு ஆயுதம்''...ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு...உலக நாடுகள் அதிர்ச்சி