Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த நடவடிக்கை தேவை!- அன்புமணி ராமதாஸ்

anbhumani
, வியாழன், 1 ஜூன் 2023 (12:41 IST)
சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் வழங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  அதனால், கொள்முதல் விலையை உயர்த்தி  ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சென்னையில்  தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆவின் பால் கிடைக்காததால்  வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் தான் சென்னைக்கு வழங்கப்படுகிறது. ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதும்,  ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள்  இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம் ஆகும். ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது; அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நேற்று உறுதியளித்திருந்த நிலையில், இன்று  மீண்டும் ஆவின் பால் வழங்கல் பாதிக்கப்பட்டிருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.

அமுல் நிறுவனத்தின் வருகையும், தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை உயர்வும் ஆவின் நிறுவனத்தின்  பால் கொள்முதலை பாதித்திருக்கின்றன என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இந்த பாதிப்புகளை போக்கி, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு கொள்முதல் விலையை உயர்த்துவது மட்டும் தான் ஒரே தீர்வு. இதை செய்யாவிட்டால் நாளுக்கு நாள் ஆவின் பால் கொள்முதல்  மோசமடைவதை தவிர்க்க முடியாது.

ஆவின் நிறுவன சிக்கலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை  லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.

மற்றொருபுறம் ஆவின் பால் வணிகத்தையும் பெருக்கி தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை 50% அளவுக்கு  உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்- முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்