பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய உள்ள நிலையில், கிட்டத்தட்ட விமான டிக்கெட் அளவுக்கு ஆம்னி பேருந்துகள் கட்டணம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை இருப்பதால், பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே ரயில்கள், சிறப்பு ரயில்கள், அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி நேரத்தில் ஆம்னி பேருந்துகளையே நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்கள். சென்னையிலிருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் செல்ல ₹4000-ம், மதுரை செல்ல ₹3800-ம், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்ல ₹3500-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்திற்கு ₹4200 தான் கட்டணம் என்ற நிலையில், நெல்லை செல்வதற்கு ஆம்னி பேருந்துகளில் ₹4000 கட்டணம் என்பது கிட்டத்தட்ட விமான கட்டணத்திற்கு இணையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.