சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இரண்டு சிறுமிகளுக்கு மத போதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிவு செய்தவுடன் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் அவர் இருப்பது குறித்த தகவல் கோவை போலீசாருக்கு கிடைத்தது. இதன்படி, நேற்று கேரளாவிற்குச் சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.