அறிஞர் அண்ணா குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அறிஞர் அண்ணாவை தனது மானசீகமான குருவாகவே, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பார்த்தனர். அதன் விளைவாக, எம்.ஜி.ஆர், தான் தொடங்கிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் வைத்தார். தான் நடிக்கும் திரைப்படங்களில் இடம் பெறும் பாடல் காட்சியிலும் அவர் அண்ணா என்ற வார்த்தையை தொடர்ந்து உச்சரித்து வந்தார்.
அவருக்கு பின் அதிமுகவை கையில் எடுத்த ஜெயலலிதாவும், விழாக்களில் பேசும்போது கூட ‘வாழ்க அண்ணா நாமம்’ என்று கூறியே தனது பேச்சை முடிப்பார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “எம்.ஜி.ஆர் மட்டும் அண்ணாவின் பெயரை தனது கட்சிக்கு வைத்திருக்காவிட்டால் அண்ணா என்றொருவர் வாழ்ந்தது யாருக்கும் தெரிந்திருக்காது” எனப் பேசினார்.
இது சமூகவலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் செல்லூர் ராஜூவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.