மு.க.அழகிரியால் திமுகவில் நிச்சயம் ஒரு பிளவு ஏற்படும் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின், மு.க.ஸ்டாலினே தலைவர் பதவியில் அமர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவரின் சகோதரர் மு.க.அழகிரி தற்போது சில பிரச்சனைகளை கிளப்பி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்திய அவர் ‘எனது ஆதங்கம் பற்றி கூற வந்தேன். இது கட்சி ரீதியான ஆதங்கம்தான். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதுபற்றி விரிவாக கூறுகிறேன்’ என கூறியிருந்தார். ஆனால், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கடும் எதிர்ப்பு இருப்பதால், அதை ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டது போல் தெரிகிறது. எனவே, அழகிரி திமுகவிற்கு எதிராக செயல்பட தொடங்குவார் அல்லது தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “ திமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும். அழகிரியின் 40 ஆண்டு கால அரசியல் பணிகள் பற்றி மதுரையை சேர்ந்த எனக்கு நன்றாக தெரியும். அவரது திறமை, தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு அனைத்தும் எனக்கு தெரியும். என்ன நடக்கிற என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என அவர் தெரிவித்தார்.