Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் உறுதி

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் உறுதி
, புதன், 15 ஆகஸ்ட் 2018 (13:10 IST)
திமுகவில் அழகிரியை சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
திமுகவில் அழகிரி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்பதுதான் தற்போது பெரும்பாலோரின் கேள்வியாக இருக்கிறது. ஊடகங்கள் மற்றும் செய்திதாட்களில் இது தொடர்பான செய்திகளே அதிகம் விவாதிக்கப்படுகிறது.
 
திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி அதன்பின் நிரந்தரமாகவும் நீக்கப்பட்டுவிட்டார். கடந்த 5 வருடங்களாக அவர் திமுகவில் இல்லை. 
 
இந்நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு திமுகவில் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்துள்ளது. தலைவர் பதவி ஸ்டாலினுக்கும், பொருளாளர் பதவி துரைமுருகனுக்கும் செல்ல வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அனுபவம் கருதி பொதுச்செயலாளர் பதவியில் பேராசிரியர் அன்பழகனே நீடிக்கட்டும் என ஸ்டாலின் கருதுவதாக தெரிகிறது.
 
கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது ஸ்டாலினுடம் இணைந்து செயல்பட்ட அழகிரி, நேற்று முன்தினம் கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ‘என் ஆதங்கத்தை தெரிவிக்க வந்தேன். என்னுடைய ஆதங்கம் கட்சி சார்ந்ததே. அதுபற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தெரிவிப்பேன்’ என கொளுத்தி போட்டுள்ளார்.
webdunia

 
கருணாநிதி மரணம் அடைந்துள்ள இந்த சூழ்நிலையில் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து அனைவரும் ஒற்றுமையாக திமுகவை வழிநடத்த வேண்டும் என கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கருதுகிறார்கள். ஆனால், அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்கவே கூடாது என திமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் கருதுகிறார்கள். இதுபற்றி வெளிப்படையாகவே அவர்கள் ஸ்டாலினிடம் கூறிவிட்டனர்.
 
நேற்று நடைற்ற செயற்குழு கூட்டத்திலும் இதுபற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது. அதற்குள் தன்னை கட்சியில் இணைத்து தனக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என அழகிரி கருதுகிறார்.
 
அழகிரியை கட்சியில் இணைக்க வேண்டும் என சில மாவட்ட செயலாளர்கள் கருதினாலும், அதை ஸ்டாலினிடம் வெளிப்படையாக பேச அவர்கள் தயங்குகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆனால், யார் கூறினாலும் சரி.. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சரி. அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். 
 
பொதுக்குழு கூட்டத்தில் இது உறுதியாக தெரிந்துவிடும். அதற்கு பின் அழகிரியின் அதிரடிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியாது. தனிக்கட்சி தொடங்கினாலும் அவர் பின்னால் யாரும் செல்ல மாட்டார்கள். எனவே அதுபற்றி யோசிக்க வேண்டாம் என ஆணித்தரமாக ஸ்டாலினிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி