Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக அரசின் அதிகார அடக்குமுறைக்கு சீமான் கண்டனம்!

திமுக அரசின் அதிகார அடக்குமுறைக்கு சீமான் கண்டனம்!
, செவ்வாய், 24 மே 2022 (08:23 IST)
ஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக அரசின் அதிகார அடக்குமுறை பச்சையான சனநாயகப் படுகொலை என சீமான் கண்டனம்.

 
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைபாளர் சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜூனியர் விகடன் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் மீது பொய்வழக்கு புனைந்து கைது செய்து அச்சுறுத்த முயலும் திமுக அரசின் செயல் அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டுக் காலத்தில் தமக்கு எதிராகக் கருத்துக்களைப் பகிரும் ஊடகவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரையும் பொய் வழக்குகள் மூலம் ஒடுக்க நினைக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
 
இந்திய ஒன்றியத்தில் மதவாத பாஜக அரசால் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை போராளிகள் மீது எத்தகைய அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் ஏவப்படுகின்றனவோ அதற்குச் சற்றும் சளைக்காமல் தமிழ்நாட்டினை ஆளும் திமுக அரசால் காவல்துறை மூலம் கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. திமுகவிற்கு எதிராகக் கருத்து தெரிவித்தார் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே ஊடகவியலாளர் சாட்டைத் துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு இன்றுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia
தற்போது அதன் நீட்சியாக, ஜி ஸ்கொயர் என்கிற தனியார் நிலவிற்பனை நிறுவனம் செய்யும் அதிகார அத்துமீறல்கள் குறித்த உண்மைகளை வெளியிட்டடற்காக ஜூனியர் விகடன் இதழ்மீது, தொடர்புடைய நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீதும், புகாரளிக்கப்பட்ட 5 மணி நேரத்திற்குள் சென்னை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதும், கைது நடவடிக்கையை துரிதப்படுத்துவதும் இதன் பின்னணியிலுள்ள ஆளும் அதிகார மையங்களின் அரசியல் அழுத்தத்தினை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
 
பேச்சுரிமை, கருத்துரிமை என்று மேடைக்கு மேடை சனநாயக மாண்புகள் பற்றிப் பாடமெடுக்கும் திராவிடத் திருவாளர்கள், தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்குறைகள், நிர்வாகத் தவறுகள், ஊழல் முறைகேடுகள் குறித்தான விமர்சனங்களைக் கூட ஏற்க மனமில்லாமல், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மீது பொய்வழக்கு புனைந்து அடக்கி ஒடுக்க முயல்வது திமுகவின் அப்பட்டமான இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
webdunia
பொய்ப்புகாரை வழக்காகப் பதிவு செய்து ஊடகங்களை மிரட்டுவதன் மூலம் தனது அரசுக்கும், அதன் செல்வாக்குமிக்க அதிகார மையங்களுக்கும் எதிராக எவரும் எதிர்கருத்தோ, விமர்சனமோ செய்துவிடக்கூடாது என்ற திமுகவின் எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. எது செய்தாலும் சரி என்று ஆதரவாக தாளம் போடும் சில ஆதரவு ஊடகங்களைப் போலவே அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இருக்க வேண்டும் என்ற திமுக அரசின் பேராசையினால் தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் முற்று முழுதாக காவு கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஆகவே, உண்மையிலேயே திமுக அரசிற்குச் சனநாயகத்தின் மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் அணுவளவாது அக்கறை இருக்குமாயின் ஜூனியர் விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் மீதும், சமூக ஊடகவியலாளர்கள் மீதும் போடப்பட்டுள்ள பொய்வழக்கினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாணமாக இருந்த சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண்: சென்னையில் பரபரப்பு