தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ரஜினி, கலவரத்திற்கு காரணமே சமூக விரோதிகள் தான் என்றார்.
ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் ஆவேசமாக பேசினார். போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி அடையாது என்றும், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது என்றும் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
ரஜினியின் இந்த கருத்து போராடிய மக்களை அவமதிப்பதாகவும், ரஜினி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சீமான், போராடும் மக்களை சமூகவிரோதிகள் என்று பேசுவது மிகவும் மோசமானது. சமூகவிரோதிகள் போராட்டத்திற்கு குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வருவார்களா?
தொழில்வளர்ச்சி குறித்து பேசும் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கி குடித்துப் பார்க்கட்டும். அப்பொழுது புரியும் அவருக்கு மக்களின் துயரம்.
ரஜினியால் போராடுபவர்களுக்கு துணை நிற்க முடியாவிட்டாலும் போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று கொச்சை படுத்துவது விஷமத்தனம். அரசின் மீது கேள்வி எழுப்ப துணிவில்லாதவர்கள் தான் இப்படி போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று கூறுவார்கள் என்றும், ரஜினி இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் ஆவேசமாக பேசினார்.