Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை திரும்பப்பெறுக - சீமான்!

Advertiesment
அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை திரும்பப்பெறுக - சீமான்!
, வெள்ளி, 1 ஜூலை 2022 (16:07 IST)
அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தல். 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) வரியை கடுமையாக உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் வாழவே முடியாத அளவிற்குச் சிறிதும் ஈவு இரக்கமின்றிக் கண்மூடித்தனமாக வரியை உயர்த்தும் மோடி அரசின் கொடுங்கோன்மைப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
 
கடந்த 2017-ஆம் ஆண்டு சூலை மாதம் மாநில அரசுகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி மோடி அரசால் வலுக்கட்டாயமாக ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட கடுமையான விலை உயர்வால் தொழில்துறையினர், வணிகர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை அதிக அளவில் உயர்த்துவதை ஒன்றிய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
 
ஒன்றிய அரசின் இத்தகைய ஜி.எஸ்.டி வரி விதிப்பானது மாநில அரசுகளின் வரிவருவாயை பறித்து அவற்றின் கடன்சுமை அதிகமாகக் காரணமானதோடு, மக்களின் தலையில் கட்டுங்கடங்காத வகையில் விலையுயர்வு சுமையை ஏற்றி வாட்டி வதைக்கும் கொடுஞ்செயலையும் மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஏற்கனவே கைத்தறி சேலைகள் மற்றும் நூல் மீதான ஜி.எஸ்.டி வரியை 5 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தியதும் அதனால் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலே நசிந்துபோகும் பேராபத்து ஏற்பட்டதை உணர்ந்து, கடுமையான எதிர்ப்போராட்டம் நடத்தியதும் பின் அம்முடிவு ஒத்திப்போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
தற்போது மீண்டும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கத்தி, பிளேடு, உமிழ் மின்விளக்குகள், சூரிய ஒளி சூடேற்றிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீதான வரி உயர்வால் விவசாயப் பெருங்குடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
 
மற்ற நாடுகளிலெல்லாம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலக அளவில் அதிக ஜி.எஸ்.டி விதிக்கும் நாடாக இந்தியா இருந்தபோதும் இன்றுவரை தொடர்ந்து விலைவாசி உயர்ந்துவருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காரணமாகும்.
 
எனவே ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவல்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை