கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு குறித்து சீமான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி போன்றவர்களை சொந்த பிள்ளைகள் போன்றுதான் தட்டிக் கொடுத்து வளர்த்தோம். மேடைகளில் பேச, பேச, ஊடக வெளிச்சம் கிடைத்ததும், தான் பெரிய தலைவர் போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு வருகிறது.
கல்யாண சுந்தரம் கட்சியில் 10 ஆண்டுகளாக இருக்கிறார். ஆனால், அவரை போன்ற ஆட்கள் கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார்கள். இதனை அவர் நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறார்.
தனக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து கொண்டு எனக்கு எதிராக தொடர்ச்சியாக தரக்குறைவாக சமூக வலைதளங்களில் கல்யாண சுந்தரம் பதிவிட்டு வருகிறார். என்னை தரக்குறைவாக பேசுவதை ரசிக்கிறார். கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி போன்றோருக்கு என் மீது பெரிய அபிமானம் கிடையாது.
எனது கட்சியில் இருப்பவர்கள் நான் வேண்டும் என்றால் என்னோடு பயணிக்கலாம். இல்லையென்றால் கல்யாண சுந்தரத்தோடு பயணிக்கலாம். இவர்கள் செய்தது போன்று ஒரு நயவஞ்சகத்தை ஒரு சூழ்ச்சி துரோகத்தை உலகத்திலேயே நான் எங்குமே பார்த்தது இல்லை.
எத்தனையோ பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன். சிறைக்கு சென்றுள்ளேன். அப்போது கூட வேதனைபட்டது இல்லை, துளிகூட கலங்கியது இல்லை. கல்யாண சுந்தரத்தை நீக்கினால் கட்சி இரண்டாகுமா என்றல் சீமான், நான் செத்தாலும் கட்சி உடையாது.
இவர்கள் என் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நான் செத்தால் கட்சியை கைபற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் செத்தாலும் இவர்களோடு கட்சியினர் சேரக் கூடாது என கூறியுள்ளார்.
அதோடு, என் மரணம் எதிரிகளின் கைகளால் நடக்க வேண்டும். என் உடம்பில் ஒரு சின்ன கீறலை கூட என் துரோகிகள் கைகளால் ஏற்க நான் தயாராக இல்லை என்று பேசியுள்ளார்.