Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க‌ தமிழக அரசே துணைபோவதா? சீமான் காட்டம்!

Advertiesment
வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க‌ தமிழக அரசே துணைபோவதா? சீமான் காட்டம்!
, புதன், 17 ஜூன் 2020 (16:22 IST)
தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? என சீமான் கண்டனம்.
 
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள காலியான 96 சரக்கு ரயில் கார்டு பணியிடங்களுக்கான தேர்வுகள் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றன. அந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 3000 பேர் வரை போட்டியிட்டு தேர்வு எழுதினார். ஆனால் அதில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவுகள் வெளியாகி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
இதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியுள்ளதாவது, தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார வாரியத்தில் வேலைக்கமர்த்தி அவர்கள் தமிழ் கற்க இரண்டு ஆண்டுகள்வரை அவகாசம் அளிக்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 
 
90 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பணிக்காகக் காத்திருக்கும் சூழலில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தர எவ்வித முன்னெடுப்பையும் செய்யாத தமிழக அரசு, வெளி மாநிலத்தவர்களைத் தமிழக அரசுத் துறைகளில் பணியமர்த்த இவ்வளவு சிரத்தையெடுப்பது எம்மாநிலத்திலும் நடைபெறாத கேலிக்கூத்தாகும்.
 
இந்தியாவின் மற்ற மாநிலங்களிலெல்லாம் அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்ய அம்மாநில அரசுகள் முனைப்பு காட்டி வரும் தற்காலத்தில் தமிழக அரசு மட்டும் விதிவிலக்காக வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகப்பணிகளில் தேர்வின் மூலமும், சிறப்புச்சலுகையின் மூலமும் இடமளிக்க முயல்வது வன்மையானக் கண்டனத்திற்குரியது. ‘வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது!’ எனக்கூறி மாநிலத் தன்னுரிமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் முழக்கமிட்ட அறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்கும் கட்சி, இன்றைக்கு வடவர்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு வழிவகுத்து அதற்காய் வாசல் திறந்துவிடுவது தமிழர்களுக்கு இழைத்திடும் மாபெரும் துரோகமாகும். 
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அஞ்சலகப் பணிகள், தொடர்வண்டித்துறைப்பணிகள் என யாவற்றிலும் வெளி மாநிலத்தவர்கள் உட்புகுந்து தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கும் நிலையில் இப்போது தமிழக அரசே அவர்களுக்கு சிறப்புச்சலுகையளித்து மொழியறியாதவர்களைச் சிகப்புக்கம்பளம் விரித்து வரவேற்க முனைவது ஏற்கவே முடியா பெருங்கொடுமையாகும்.
 
தமிழர்களிடம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வடநாட்டவருக்கு வாழ்வளிக்க முயலும் தமிழக அரசின் இக்கொடுங்கோன்மை முறையை எவ்வாறு ஏற்பது? வெளி மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து இரண்டாண்டு கால அவகாசத்திற்குப் பிறகு, தமிழ் கற்றால் போதுமெனும் அளவுக்கு வாய்ப்பு அளிப்பதன் நோக்கமென்ன? மற்ற மொழியினருக்கு வேலையை கொடுத்து பின் தங்கள் மொழியை கற்றுக்கொள்ள செய்யும் இப்படி ஒரு கொள்கை முடிவு இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கிறது? தமிழகத்தில் திறமையும், தகுதியும் படைத்தவர்களே இல்லையா? 
 
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விடுத்து மற்ற மாநிலத்தவரை பணியில் இருத்தி தமிழைக் கற்க இரண்டாண்டு காலம் அவகாசம் அளிப்பது மிகத்தவறான செயலாகாதா? அவ்வாறு வரும் வட மாநிலத்தவர்கள் இரண்டாண்டுகள் கழித்து தமிழ் கற்றுவிட்டார்கள் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது? அதற்கெனத்‌ தனியாகத் தேர்வு எதுவும் நடத்தப்படுமா? சோதனை எதுவும் செய்யப்படுமா? இல்லையெனில், பிறகெதற்கு இரண்டாண்டு கால அவகாசம்? அப்படி அவர்கள் இரண்டாண்டு காலத்தில் தமிழ் கற்காதபட்சத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்களா?
 
தமிழகத்திலுள்ள மத்திய அரசுத்துறைகளே தமிழர்‌ அல்லாதவர்க்கென்று முழுமையாக மாற்றப்பட்டுவிட்டப் பிறகு, மாநில அரசின் துறைகளையும் தாரை வார்க்க முயல்வதன் நோக்கமென்ன? அன்று இந்தித்திணிப்பை எதிர்த்து அதிகாரத்திற்கு வந்தவர்களின்‌ வழிதோன்றல்கள், இன்றைக்கு இந்திக்காரர்களையே நேரடியாகத் திணிக்க முற்படுகிற இழிநிலையை என்னவென்று சொல்வது? ஏற்கனவே, கோடிக்கணக்கான‌ வடநாட்டவர்கள் தமிழகத்திற்குள் உட்புகுந்து பொருளியல் சுரண்டல் மூலம் தமிழர்களின் பொருளாதார வாழ்வியலை மொத்தமாய் ஆக்கிரமித்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அவர்களது ஆதிக்கத்தை மேலும் வளர்த்தெடுக்கும் கொடுஞ்செயல் அல்லவா?
 
இவ்வளவு நாட்களாக தேர்வுகளின் மூலம் நடந்தேறிய‌ முறைகேடுகளின் விளைவாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்‌ தேர்வாகி‌‌ வந்த நிலையில், தற்போது வெளிப்படையாகவே வெளிமாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ள தாராளமயமாக்கல் திட்டம் தமிழகத்திலேயே தமிழர்களைப் பொருளியல் அடிமைகளாக மாற்றும் உள்நோக்கம் கொண்ட சதிச்செயலாகும். இதே நிலை நீடிக்குமானால் ‍சொந்தத் தாய் நிலத்திலேயே தமிழர்கள் ஏதிலியாக மாறும் கொடுமை நடந்தேறும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
 
ஆகவே, மண்ணின் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களது நலன்களைப் பேணும் வகையில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசுத்துறைப் பணிகளைச் பெற‌ வழிவகை செய்கிற சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளது போல மண்ணின் மைந்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி எச்சரிக்கை