மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில், மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல் அது என்றும் பாஜகவினர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் அப்படி பேசுகிறார்கள் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சிறுத்தையாய் சீறியது என்றும் முதல்வரை சந்தித்ததும் சிறுத்தை சிறியதாக மாறிவிட்டது என்றும் இந்த நாடகம் தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மூக்கறுபட்டவர்களின் கூச்சல், புலம்பல், கூக்குரல் இது, அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று தெரிவித்தார். தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் 18 மாதங்கள் உள்ளன என்றும் அதற்குள், தேர்தல் கணக்கு, கூட்டணிக் கணக்கு என்று கூப்பாடு போட்டு, கூச்சல் எழுப்பினார்கள் என்றும் குறிப்பிட்டார்.
எப்படியாவது மேலும் விரிசல் அடையாதா, பிளவு ஏற்படாத என காத்திருந்தார்கள் என்று திருமாவளவன் கூறினார். ஆனால், ஏமாந்து போய்விட்டார்கள் என்றும் அதனால், ஏற்பட்ட விரக்திதான் இப்போது வெளிப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களுக்கு எதிரான ஒரு அரசியலைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேசுகிறார்கள் என்பதை புரிந்தும் இந்த மாநாட்டுக்கு வருகிறார்கள் என்றால் விசிகவும், திமுகவும் ஒரே நேர்க்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது என்பதுதான் பொருள் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.